புதுடெல்லி,
மக்கள் அளித்த தீர்ப்பை ஆபத்தான வழியில் தவறாகப் பயன்படுத்துகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது குறித்து திட்டங்களை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஏ.கே.அந்தோனி, கே.சி.வேணுகோபால், மல்லிகாஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியது குறித்து கட்சி வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:
''காங்கிரஸ் கட்சியின் தீர்க்கமான முடிவெடுக்கும் திறனையும், எதிர்த்து நிற்கும் திறனையும் பாஜக அரசு சோதித்து வருகிறது. நம்முடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தி, பாஜக குறித்த விஷயங்களை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.
மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கி இருக்கிறது. மக்கள் தேர்தலில் அளித்த தீர்ப்பை ஆபத்தான முறையில், தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக அரசு.
காங்கிரஸ் கட்சி எப்போதும் போராட்டக் குணத்துடன் இருக்க வேண்டும். நம்முடைய எதிர்க்கும் திறன் இப்போது பாஜக அரசால் சோதித்துப் பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரச் சூழல் மிகவும் வருத்தம் அளிக்கும் நிலையில் இருக்கிறது, ஏராளமான இழப்புகள் ஏற்படும்போது, மக்களின் நம்பிக்கை ஆட்டம்காண வைத்துவிடும்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு எப்போதும் இல்லாத வகையில் பழிவாங்கும் அரசியல் செய்து, பொருளாதாரப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் மரபுகளையும், பெருமைகளையும் இந்த அரசு அபகரிக்க முயல்கிறது. உண்மையான விஷயங்களை, செய்திகளை தவறாகத் திரித்தும், அது தங்களின் கொடிய திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது".
இவ்வாறு சோனியா காந்தி பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரச் சூழல் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். நாம் மிகவும் ஆபத்தான சரிவை நோக்கிச் செல்கிறோம், பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. அரசு இதை உணராவிட்டால், அதன் பாதிப்பு வேலைவாய்ப்புத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிடிஐ