புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்காங் சோ ஏரிப் பகுதியில் இன்று இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சிறிய அளவில் மோதல் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாங்காங் சோ ஏரிப் பகுதியில் இந்திய ராணுவம் அணிவகுப்பு ஒத்திகை நடத்தவும், பயிற்சி எடுக்கவும் சீன ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு இந்திய ராணுவ வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், சிறிது நேரத்திலேயே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் வந்து தலையிட்டு இருதரப்பு பேச்சு நடத்தியபின், மோதல் முடிவுக்கு வந்தது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் 3,488 கி.மீ. பகுதிக்கு இரு தரப்பு நாடுகளுக்கு இடையே சிக்கல் நிலவுகிறது. திபெத்தின் தெற்குப் பகுதியாக அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருகிறது.
திபெத்திய பகுதியில் 130 கி.மீ. பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது.
இதற்கு முன் டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்குப் பின் பிரதமர் மோடி, சீன அதிபரைச் சந்திக்க பெய்ஜிங் சென்றிருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பின் இரு தரப்பு ராணுவமும் சமாதானம் அடைந்தன.
அதுமட்டுமல்லாமல் அருணாச்சலப் பிரதேசப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதாகவும் தகவல் வெளியான நிலையில், அதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
பிடிஐ