கொல்கத்தா: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) இந்தியர் எவரும் விடுபட மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதி கூறினார்.
இது தொடர்பாக ஸ்மிருதி இரானி நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என்ஆர்சி-க்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். என்ஆர்சி-யில் இந்தியர் எவரும் விடுபட மாட்டார்கள். நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேவேளையில் நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விஷயத்தில் மம்தா இரட்டை வேடம் போடுகிறார். மத்திய அரசின் கொள்கைகளை முதல்வர் எதிர்த்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். மத்திய அரசுடன் அவர் விரோதம் பாராட்டுவதால் மத்திய அரசின் திட்டப் பலன்களை மேற்கு வங்க மக்கள் பெற முடியவில்லை. இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.- பிடிஐ