டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழ மாணவியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவருமான ஷீலா ரஷித் : கோப்புப்படம் 
இந்தியா

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷித் மீது தேசத் துரோக வழக்கு: ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி,


ராணுவத்தினரை விமர்சித்ததால் தேசத் துரோக வழங்கு பதிவு செய்யப்பட்ட டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழ மாணவியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவருமான ஷீலா ரஷித்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு பிரிவு 377-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. அங்கு வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன.

இதுகுறித்து ஜவஹர்லால் பல்கலைக்கழ மாணவியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவருமான ஷீலா ரஷித் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், " ராணுவத்தினர் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை தூக்கிச் செல்கிறார்கள், மக்களை சித்ரவதை செய்கிறார்கள். காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. ராணுவத்தினர் செய்த செயல்களுக்கு ஆதாரம் காண்பிக்க முடியும்" எனத் தெரிவித்தார்

ஆனால், ரஷித்தின் குற்றச்சாட்டுகளை ராணுவம் மறுத்தது, அடிப்படை ஆதாரமற்றது, ஆதாரமில்லாதது என்றும் தெரிவித்தது. காஷ்மீர் முழுவதும் ரஷித் இதுபோன்ற ஆதாரமில்லாத விஷயங்களை பரப்பி, அமைதியை குலைக்கிறார் என்று பலரும் குற்றம்சாட்டினார்கள்.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவஸ்தவா டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவில் ரஷித் மீது புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஷீலா ரஷித் மீது 124-ஏ(தேசத்துரோகம்), 153ஏ(பகையைத் தூண்டுதல்), 153(கலவரத்தை தூண்டுதல்),504(அமைதியை குலைத்தல்), 505(மக்களை தவறாக வழிநடத்துதல்) போன்ற பிரிவுகளின் கீழ் ரஷித் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக ஷிலா ரஷித் இன்னும் போலீஸாரால் கைது செய்யப்படவில்லை என்றாலும், முன்ஜாமீன் கோரி விண்ணப்பத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூடுதல் அமர்வு நீதிபதி பவான் குமார் முன் இன்று ஷீலா ரஷித் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அரசுதரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், " ஷீலா ரஷித்துக்கு இப்போதுவரை போலீஸார் எந்த சம்மனும் அனுப்பவில்லை. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த 6 வாதங்கள் தேவை. ராணுவத்தினர் தரப்பில் இருந்தும் எந்தவிதமான புகாரும் இல்லை " என்று தெரிவித்தார்.

அதற்கு ஷீலா ரஷித் தரப்பு வழக்கறிஞர், " போலீஸார் விசாரணைக்கு அழைத்தால் அதில் பங்கற்று தங்களின் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி பவான் குமார் ஜெயின் பிறப்பித்த உத்தரவில், " குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷீலா ரஷித்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன். அவரை போலீஸார் கைது செய்யக்கூடாது, விசாரணைக்கு தேவைப்பட்டால் ரஷித் பங்கேற்று போலீஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 5-ம் தேதி நடக்கும்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT