கோப்புப்படம் 
இந்தியா

மொஹரம் ஊர்வலம்; காஷ்மீரின் பல பகுதிகளில் மீண்டும் பாதுகாப்பு கெடுபிடி: இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிப்பு 

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்,

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள், வன்முறைகள் ஏதும் நடக்காமல் தவிர்க்கும் வகையில் காஷ்மீரின் பல்வேறு இடங்களில் மீண்டும் பாதுகாப்புக் கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி இருக்கின்றன.

வர்த்தகப் பகுதியான லால் சவுக் பகுதி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்குள் வரும் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு ஏராளமான போலீஸார், பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் நீக்கியது. இதனால் கடந்த மாதம் 5-ம் தேதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எந்தவிதமான வன்முறையும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு பாதுகாப்புப் படையினர் ஏராளமான கெடுபிடிகளை விதித்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வர முடியாமல் முடங்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் கெடுபிடிகளைத் தளர்த்தியபோதிலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டபோதிலும் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர்.

இந்நிலையில், மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம்கள் ஊர்வலம் செல்வார்கள். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம், வன்முறை நிகழலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் போலீஸார் ஊடரடங்கு உத்தரவு போன்று பாதுகாப்புக் கெடுபிடிகளை அமல்படுத்தியுள்ளனர். அதிகாரபூர்வமான ஊடரங்கு உத்தரவை மாநில நிர்வாகம் பிறப்பிக்கவில்லை என்ற போதிலும், அதுபோன்ற சூழல் நிலவுகிறது.

இதனால் ழக்கம் போல் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியே வராமல் மக்கள் முடங்கியுள்ளனர். காஷ்மீரில் ஏற்கெனவே பாதுகாப்புக் கெடுபிடிகளை நீக்காத பகுதிகளிலும் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


பிடிஐ

SCROLL FOR NEXT