இந்தியா

வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணைகள்: 19 மாதங்களுக்குள் வழங்க ரஷ்ய துணைப் பிரதமர் உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

‘‘இந்தியாவுக்கு 18 அல்லது 19 மாதங்களுக்குள், ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணை கள் வழங்கப்படும்’’ என்று ரஷ்ய துணைப் பிரதமர் யூரி போரிசோவ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கு கடந்த வாரம் சென்ற பிரதமர் மோடி, அதிபர் புதின் உட்பட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து பேசினார். அப்போது சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகருக்கு சரக்குக் கப்பல் போக்குவரத்து உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந் தங்கள் கையெழுத்தாயின.

இந்நிலையில், ரஷ்ய துணைப் பிரதமர் யூரி போரிசோவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா ஒப்பந்தம் மேற் கொண்டது. அதன்படி 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 5 எஸ்-400 ரக ஏவுகணைகள் இந்தியாவுக்கு 18 அல்லது 19 மாதங்களுக்குள் வழங்கப்பட்டு விடும். குறித்த காலத்துக்குள் இந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஒப்பந்தத்தின்படி ஏவுகணை களுக்கான முன்பணத்தை இந்தியா வழங்கி உள்ளது. எனவே, திட்டமிட்டபடி இந்தியாவுக்கு ஏவு கணைகளை வழங்குவோம்.

இவ்வாறு ரஷ்ய துணைப் பிரதமர் யூரி போரிசோவ் கூறினார்.

எஸ்-400 ரக ஏவுகணைகளை தரையில் இருந்து வான் இலக்கை நோக்கி எளிதாக செலுத்த முடியும். இந்த ஏவுகணை வானில் வரும் எதிரி இலக்கை தொலை தூரத்திலேயே மிக வேகமாக அழிக்கும் திறன் கொண்டது.

டெல்லியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 19-வது இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாடு நடைபெற்றது. அப்போதுதான் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

முன்னதாக கடந்த மாதம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றார். அங்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து இந்திய - ரஷ்ய உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யாவிடம் இருந்து ஆயு தங்கள் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தியாவுக்குத் தேவைப்படும் அதிநவீன பாதுகாப்பு தளவாடங் களை வழங்க தயாராக இருக் கிறோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கினால், இந்திய - அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பில் கடும் பின்விளைவு கள் ஏற்படும் என்றும் குறிப்பாக இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதிக்கும் என்றும் எச்சரித்தது.

எனினும், ரஷ்யாவுடன் பாதுகாப்பு உறவை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT