இந்தியா

குஜராத் கலவரத்தின் எதிரெதிர் துருவங்கள் இணைந்த சுவாரஸ்யம்: பாதிக்கப்பட்டவர் குற்றவாளியின் செருப்புக் கடையைத் திறந்து வைத்த சம்பவம்

செய்திப்பிரிவு

2002-ம் ஆண்டு கோத்ரா கலவரத்தை வெளிப்படுத்திய புகைப்படங்களில் இடம்பெற்ற உயிருக்குப் பாதுகாப்பு கேட்கும் இஸ்லாமிய இளைஞரும், கத்தியுடன் மிரட்டும் நபரும் தற்போது வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து இணைந்துள்ளனர். தனது செருப்புக் கடையை இஸ்லாமிய இளைஞரை வைத்துத் திறந்துள்ளார் அந்த நபர்.

2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் கோரத்தை வெளிப்படுத்திய 2 படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி பரபரப்பானது. அதில் ஒரு படத்தில் உயிர்ப் பிச்சை கேட்டு இளைஞர் ஒருவர் கெஞ்சுவது போன்ற படம். அது அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பரவலாகப் பேசுபொருளானது.

அந்தப் படத்தில் இருந்த இளைஞரின் பெயர் குத்புதின் அன்சாரி, அடுத்த படம் கையில் வாளுடன் ஆவேசமாக நிற்கும் நபர். அவரது பெயர் அஷோக் பார்மர் என்கிற மோச்சி.

அந்த நேரத்தில் மதக் கலவரத்தின் கோரத்தையும் பாதிக்கப்பட்டவரின் மனநிலையையும், உயிர்ப் பிச்சை கேட்டு கெஞ்சி அழும் அன்சாரியின் புகைப்படம் உணர்த்தியதாக கருத்து எழுந்தது. அதேபோன்று அஷோக் பார்மர் படமும் பிரபலமானது. அமைதியான வாழ்க்கை, சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் என அப்போது அஷோக் பார்மருக்குப் புரியவில்லை.

ஆனால் காலம் மிகச்சிறந்த ஆசிரியன் அல்லவா? கலவரத்தில் ஈடுபட்டதால் அனைத்தையும் இழந்து, வீடின்றி நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டது மோச்சிக்கு. வருடங்கள் கடந்தபோது வறுமை அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தின. இந்தியாவில் அனைவருக்கும் இடம் உண்டு, அனைவரும் இந்திய மக்களே, வேற்றுமையில் ஒற்றுமை, மதத்துவேஷம் கூடாது என்பதை உணர்ந்துகொண்டார்.

வழக்கில் சிக்கிய அவரை 2005-ல் நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் குஜராத் அரசு செய்த மேல்முறையீடு காரணமாக அவர் 2014-ம் ஆண்டுவரை வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது வருமானம் அனைத்தையும் இழந்த மோச்சி திருமணமே செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் தலித் - இஸ்லாமிய ஒற்றுமைக்காகப் பாடுபடும் இயக்கத்தில் இணைந்த மோச்சி தான் செய்த கொடுமைகளுக்காகப் பகிரங்க மன்னிப்பு கேட்டார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட தையல் தொழிலாளி அன்வர், கடந்த வாரம் டெல்லி தர்வாஜா ஏரியாவில் மோச்சியின் செருப்புக் கடையை திறந்து வைத்தார். அந்தக் கடையின் பெயர் (ஏக்தா சப்பல் கர்) ஒற்றுமை செருப்புக் கடை.

மோச்சியின் பரிதாப நிலையை அறிந்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு செருப்புக் கடை வைக்க நிதியை அளித்துள்ளது. கடையைத் திறந்து வைத்த பின் பேசிய குத்புதீன் அன்வர், தனது நண்பர் மோச்சிக்காக பிரார்த்திப்பதாகக் கூறினார், மேலும் அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இனி நன்றாக இருப்பார். நாங்கள் இருவரும் கடினமான நாட்களைக் கடந்து வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மோச்சி கூறுகையில், ''இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு, எனக்கென்று ஒரு வீடுகூட இல்லை. ஆனால் இந்தப் புதிய வாழ்க்கை அதை எனக்குப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மதங்களை மனிதநேயம் வென்ற நெகிழ்ச்சியான நிகழ்வாக அன்வர் மற்றும் மோச்சியின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.

SCROLL FOR NEXT