புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 371 ரத்து செய்யப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டுக்கு உதாரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 371 ரத்து செய்யப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது பாஜக அரசின் இரட்டை நிலைப்பாட்டையே உணர்த்துகிறது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்று அமித் ஷா கூறிகிறாரே? அப்படியென்றால் அது சட்டப்பிரிவு 371-க்கும் பொருந்தும்தானே. காஷ்மீருக்கும் மட்டும் ஒரு விஷயம் தனியாகப் பொருந்தும் என்று கூறுவதில் உள்நோக்கம் இருக்கிறது.
தேசிய குடியுரிமை வரைவுப் பட்டியல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வடகிழக்கு மாநில மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த சூழலில் அவர்களை சமாதானப்படுத்தவே சட்டப்பிரிவு 371-ஐ பாஜக ஆதரிக்கிறது.
தேசிய வரைவுப் பட்டியல் விவகாரத்தில் பாஜக அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே மேற்குவங்கத்தில் பிரச்சினை இருக்கிறது. இப்போது அசாமிலும் பாஜக பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இது நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது" என்றார்.
அசாம் மாநிலத்தில் தேசிய தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசம் மற்றும் சில அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அப்புறப்படுத்த மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது.
-ஏஎன்ஐ