புதுடெல்லி
ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வந்தார்.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது. சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து கடந்த 5-ம் தேதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிறையில் உள்ள சிதம்பரத்தின் ட்வீட்டர் பக்கத்தில் இன்று பதிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சிதம்பரம் கூறியுள்ளதாவது:
எனது குடும்ப உறுப்பினர்களிடம் எனக்காக ட்வீட் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி வெளியாகியுள்ள ட்வீட் அதன் விவரம்: ‘‘இந்த வழக்கில் பல அதிகாரிகள் உங்களுக்கு பரிந்துரைகளையும் ஒப்புதலையும் வழங்கினார்களே அவர்கள் கைது செய்யப்படவில்லை. நீங்கள் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்’’ என பலரும் கேட்கின்றனர்.
ஏனெனில் நீங்கள் கடைசியாக கையெழுத்தை போட்டுள்ளீர்கள்?‘ ஆனால் ‘‘என்னிடம் பதில் இல்லை’’ என அந்த ட்வீட்டில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் ‘‘எந்த அதிகாரியும், எந்த தவறும் செய்யவில்லை. யாரும் கைது செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை’’ என சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டுகளை அவர் இந்தியிலும் பதிவிட்டுள்ளார்.