இந்தியா

அரசு, நீதித் துறையை விமர்சிப்பது தேச துரோகம் கிடையாது: உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி

'தேசத் துரோக வழக்குகள் மற்றும் கருத்து சுதந்திரம்' என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உச்ச நீதி மன்ற நீதிபதி தீபக் குப்தா பேசியதாவது:

நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது கிடையாது. தீர்ப்பு கள் தொடர்பான விமர்சனங்கள் குறித்து வழக்குகளை தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வேறு எந்த வழக்கு விசாரணையும் நடைபெறாது. என்னைப் பொறுத்தவரை நீதித் துறையில் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

அரசு, நீதித்துறை, ராணு வத்தை விமர்சிப்பதை தேசத் துரோகமாகக் கருதக்கூடாது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித் துறை, அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால் நமது நாடு சர்வாதிகார நாடாகிவிடும். ஜனநாயக நாடாக இருக்க முடியாது.

தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராப் பாடகர் ஹர்த் கவுர், மேற்குவங்க பாஜக மூத்த தலைவர் பிரியங்கா சர்மா, மணிப்பூர் பத்திரிகையாளர் கிஷோர் சந்திர வாங்கம் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது தேவையற்றது.

பழைய நடைமுறைகளுக்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை என்றால் புதிய பாதை எப்படி பிறந்திருக்கும்?

விருப்பு, வெறுப்பு, அச்சமின்றி பொதுமக்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த உலகம் மக்கள் வாழ்வதற்கு இன்னும் உகந்ததாக இருக்கும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பேசினார்.

SCROLL FOR NEXT