லக்னோ:
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி நிர்வாகம், தலைமைப் பண்பை மேம்படுத்த மாநில அமைச்சர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க முதல்வர் முடிவு செய்தார். இதுதொடர்பாக லக்னோ ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் உதவியை அவர் நாடினார்.
இதைத் தொடர்ந்து மாநில அமைச்சர்களுக்காக லக்னோ ஐஐஎம்-ல் நேற்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள், மாணவர்களை போல அமர்ந்து பேராசிரியர்கள் நடத்திய பாடங்களை உன்னிப்பாகக் கவனித்தனர்.
இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியபோது, "வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் நமக்கு படிப்பினையை கற்றுத் தருகிறது. கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும்போது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐஐஎம் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த உதவும். நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாக உத்தர பிரதேசத்தை மாற்ற பாஜக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.