ஜம்மு
ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரே உயர் நீதிமன்றம் செயல்படும் என்று நீதித் துறை இயக்குநர் ராஜீவ் குப்தா அறிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவரின் அரசாணை வெளியானது. நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.
அதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் தனித்தனியாக செயல்பட உள்ளன.
இந்நிலையில் காஷ்மீர் நீதித் துறை அகாடமி இயக்குநர் ராஜீவ் குப்தா, ஜம்முவில் நேற்று கூறியதாவது:
வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டப் பேரவையுடன் செயல்படும். லடாக் யூனியன் பிரதேசம், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும்.
ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரே உயர் நீதிமன்றம் செயல்படும். ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை 164 சட்டங்கள் வாபஸ் பெறப்படும். 166 சட்டங்கள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
இதுதொடர்பாக சட்ட நிபுணர் களுடன் ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு ராஜீவ் குப்தா தெரிவித்தார்.