பெங்களூரு
சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஏஏன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் லேண்டர் விக்ரம் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனாலும், இன்னும் லேண்டருடனான தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை . தொடர்ந்து லேண்டருடன் தொடர்பை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் தொடர்பு ஏற்படுத்தப்படும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம்: ஜூலை 22 முதல் இன்று வரை..
இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.
கடந்த மாதம் 20-ம் தேதி 'சந்திரயான்-2' விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை 'சந்திரயான்-2' விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ம் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.
இந்நிலையில் 'சந்திரயான்-2' விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது.
சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. சரியாக 2.1 கி.மீ தூரத்தில் இருந்தபோது லேஎண்டர் தரைக்கட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்பிலிருந்து விலகியது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரோ சிவன் அளித்த பேட்டியில் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அவர், தொடர்ந்து 14 நாட்களுக்கு லேண்டரை தொடர்பு கொள்ளும் பணி நடைபெறும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏஎன்ஐ