ஏஎன்ஐக்கு பேட்டியளிக்கும் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே. 
இந்தியா

பசுக் கோமியத்தில் மருந்துகள் தயாரிக்கப்படும்; மொரார்ஜி தேசாயும் பசுக் கோமியத்தைக் அருந்தியவர்தான்: மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

100 வயது வாழ்ந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் உடல்நலனுக்காக பசுவின் கோமியத்தைத்தான் அருந்தினார் என சுகாதார மற்றும் குடும்பநலத்திற்கான மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

மருந்துகளைத் தயாரிப்பதற்கும் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கும் பசுவின் கோமியத்தைப் பயன்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசின் மருத்துவத் துறைக்கான ஆயுஷ் அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து இன்று அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் மருத்துவ சிகிச்சைக்காக பசுக் கோமியத்தைப் பயன்படுத்துவது குறித்த விரிவான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

பேட்டியில் மத்திய இணை அமைச்சர் கூறியுள்ளதாவது:

பசுவின் கோமியம் தன்னளவிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. இது தனித்துவமாகக் கருதப்படுகிறது மற்றும் இது பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு தரத்தைக் கொண்டுள்ளது.

பல வகையான மருந்துகளை தயாரிப்பதில் பசு கோமியம் பயன்படுத்தப்படுகிறது. குணப்படுத்த முடியாத நோய் என்று கூறப்படும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க கூட இது பயன்படுத்தப்படும் அளவுக்கு தீவிர மருத்துவக் குணம் கொண்டுள்ளது.

கலப்பினமல்லாத இந்திய வகை பசுவின் கோமியம் பெரும்பாலும் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. பசு கோமியத்தைக் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆயுஷ் அமைச்சகம் இது குறித்து தீவிரமாக ஆலோசித்து செயல்பட்டு வருகிறது,

மக்கள் தங்கள் நோயைக் குணப்படுத்த பல முறை கோமியம் குடிப்பதை நாம் சாதாரணமாகவே பார்த்திருக்கிறோம். நமது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஜி அவர்களே பசுவின் கோமியத்தை அருந்தியவர்தான். அவர் 100 வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் அதிகரிப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் உலகம் முழுவதும் ஒரு சவாலாக உள்ளன. நோய்களை முற்றிலுமாக அகற்றுவதாக நாங்கள் கூற முடியாது, ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியும், பசுக்களை அதிக அளவில் வளர்க்க, இந்திய அரசு 2030ஐ இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதற்காக பசுக்களைப் பேணி பாதுகாக்கும் பணிகளில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

மேலும், 'ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜனா ஆரோக்கிய யோஜனா (ஜெய்) திட்டத்தின்' கீழ் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் திட்டத்தையும் சேர்ப்பதற்கு சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

(ஆயுஷ்) அமைச்சகம் மாற்று மருத்துவத் துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய பிரிவுகளின் வளர்ச்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இவ்வாறு மத்திய ஆயுஷ் அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT