புதுடெல்லி
கானமயிலின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு இரு மாதங்களுக்குள் காலவரையறை கொண்ட செயல் திட்டம் ஒன்றை உடனடியாக தயாரிக்க வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.
வறண்ட புல் வெளி பகுதிகளில் அதிகம் காணப்படும் கானமயில்கள் தற்போது மிகவும் அருகி வருகின்றன. ஆண்டிற்கு ஒரு முட்டை மட்டும் போடும் இப்பறவையின் எண்ணிக்கை நாளுக்குநாள்குறைந்து தற்போது அழிவின் விளிம்பில் இப்பறவைகள் உள்ளன.
கானமயில்களுக்காகவென்று ஒரு தனிக் குழுக் கூட்டத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று ஒரு குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்தது.
புதுடெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமை ஏற்றார்.
இந்தக் குழுவில் உறுப்பினர்களாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் தலைவர் மற்றும் கூடுதல் தலைவர், வன (வனவிலங்கு), மின் அமைச்சகத்திலிருந்து நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் குஜராத் மற்றும் ராஜஸ்தானின் எரிசக்தி துறைகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் இந்திய வனஉயிரிகளுக்கான அகாடமியின்ன் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் எனவும் கானமயில்களைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசு ஒரு செயல்திட்டத்தை வகுத்து அதை உடனடியாக சமர்ப்பிக்கும்படி இக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தின்போது, கானமயில்கள் அவை பறக்கும் பாதைகளில் மின் இணைப்புகளை கடக்க வேண்டியுள்ளதால் பல நேரங்களில் இளம் பறவைகளே அதிகம் உயிரிழப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புக் கொண்டது,
கூட்டத்தில் கானமயில்களைக் காக்க இந்திய வனஉயிரிகளுக்கான அகாடமி சில முக்கிய பரிந்துரைகளை அளித்தது. பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளில் அகாடமி கூறியுள்ளதாவது:
மின்சாரத்தினால் ஒரு பறவையும் இறக்காதிருக்க, அந்த பறவைகள் சுதந்திரமாக பறக்கும் வனப்பகுதிகளில் அனைத்து மின்பரிமாற்ற பாதைகளையும் கட்டுப்படுத்த வேண்டும், அங்கு புதிய காற்றாலைகளை அனுமதிக்காமல் இருக்க வேண்டும். தவிர, சூரிய மின் திட்டங்களை அப்பகுதிகளில் அதிகப்படுத்தலாம்.
சிறந்த ரோந்து உபகரணங்களோடு, பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன், வனத்துறையின் முன்னணி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதன்மூலம் கானமயில்களும் வேட்டையாடப் படுதல் தடுக்கப்பட வேண்டும். வனப்பகுதிகள் மட்டுமின்றி, தார் பாலைவனம் உள்ளிட்ட மற்ற வறண்ட பகுதிகளில் வாழும் மற்ற வனவிலங்குகளும் பறவைகளும் வேட்டையாடப்படுதல் தடுக்கப்பட வேண்டும் என அகாடமி பரிந்துரை வழங்கியுள்ளது.
இந்த பரிந்துரைகளை உடனடியாக பரிசீலித்து இரண்டு மாதங்களுக்குள் ஒரு காலவரையறை வகுக்கப்பட்ட திட்டம் ஒன்றை சமர்ப்பிக்கும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய அரசை வலியுறுத்தியது.
உயர் அழுத்த மின்கம்பி மோதி உயிரிழந்த பறவைகள்
மேலும், வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கான சட்ட மையம், வழக்கறிஞர் கவுரவ் பன்சால் மூலம் தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் நேற்று விசாரித்தது,
இந்த வழக்கில் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் ''ஒவ்வொரு காற்றாலை மின் திட்டத்திற்கும் அதன் அளவு அல்லது திறன் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் அப்பகுதியில் வாழும் பல்லுயிர் பெருக்கத்தை உறுதிபடுத்தும்படியும்'' எரிசக்தித் துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியது.
வானில் பறக்கும் பறவைகளின் பார்வைகள் தூரத்தைக் கணக்கிடும் அளவுக்கு அருகில் உள்ளவற்றை சரியாக பார்ப்பதில்லை. இத்தகைய மோசமான முன் பார்வை கொண்டிருப்பதால் அத்தகைய உயிரினங்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பெரிய அச்சுறுத்தலை உயர் அழுத்த மின்கம்பிகள் ஏற்படுத்துகின்றன என்று 30வது வன ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளில் உயர் அழுத்த மின்சாரம் பாயும் கம்பிகளில் மோதியதில் மட்டுமே 75 சதவீத பறவைகள் இறந்துவிட்டதாக அக் கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.