புதுடெல்லி
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து மேகாலயா மாநிலத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட வி.கே. தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.என் பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன் அடங்கிய கொலிஜியம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹிலா ரமானியை மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துத்தது.
தனது மாறுதலை பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கோரிக்கையை ஏற்க இயலாது என கொலிஜியம் தெரிவித்து மீண்டும் இடமாறுதலைப் பரிந்துரைத்தது.
அதேபோன்று மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை (60) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்தாக கூறப்படுகிறது.
தஹில் ரமானியை சென்னை யில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.
இந்தநிலையில் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து வி.கே. தஹில் ரமானி தனது பதவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நேற்று இரவு அனுப்பி வைத்துள்ளதாகவும், இதன் பிரதியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்து வந்த பாதை
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கொத்தா நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமானி நியமிக்கப்பட்டார்.
1958-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிறந்த நீதிபதி தஹில் ரமானி 1982 ஆம் ஆண்டு முதல் மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
தஹில் ரமானி 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் நாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பல சிறந்த தீர்ப்புகளை வழங்கிய அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பிடிஐ