இந்தியா

நரேந்திர மோடி 2.0 அரசின் 100 நாட்கள் சாதனை; 370 சட்டப்பிரிவு ரத்துக்கு 73% பேர் ஆதரவு: மிகச்சிறந்த பிரதமர் மோடி என ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2-வது அரசு 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு 73 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் நேரு, இந்திரா, வாஜ்பாய் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நாட்டின் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடி உருவெடுத்துள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த மே 30-ம் தேதி 2-வது முறையாக பொறுப்பேற்றது. புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களிலேயே முத்தலாக் தடை சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. எனினும், வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் செயல்பாடு குறித்து மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள, ஏபிபி சார்பில் கடந்த மாத இறுதியில் நாடு முழுவதும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 11,308 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக மோடி அரசின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது என ஆய்வில் பங்கேற்றவர்களில் 41 சதவீதம் பேரும் சிறப்பாக உள்ளதாக 27 சதவீதம் பேரும் தெரிவித்தனர். மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக எதைக் கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுதான் என 54 சதவீதம் பேரும் தீவிரவாதத்துக்கு எதிராக கடும் சட்டம் கொண்டுவந்ததுதான் என 21 சதவீதம் பேரும் தெரிவித்தனர்.

மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் பயன் அடைவார்கள் என 73 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். இதனால் எந்தப் பயனும் கிடைக்காது என 6 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 79 சதவீதம் பேரும், தேவையில்லை என 7 சதவீதம் பேரும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என 14 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை பிரதமராக பதவி வகித்தவர்களில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். நாட்டின் வலிமையான பிரதமர் யார் என்ற கேள்விக்கு மோடி என 67 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்திரா காந்தி (10.1%), அடல் பிஹாரி வாய்பாய் (9.7%), ஜவஹர்லால் நேரு (7.2%) ஆகியோரை மோடி பின்னுக்குத் தள்ளி உள்ளார். 6.2 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாட்டையும் பெரும்பாலானோர் பாராட்டி உள்ளனர். அவரது செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது என 39.7 சதவீதம் பேரும், சிறப்பாக உள்ளது என 24.3 சதவீதம் பேரும் தெரிவித்தனர். மோடி தலைமையிலான அரசில் அமித் ஷா பிரபலமாக விளங்குவதாக 50.8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மோடி அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள ஹரியாணா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்லில் பாஜகவுக்கு பலன் கிடைக்கும் என 76 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT