கொல்கத்தா, பிடிஐ
தேசிய குடிமக்கள் பதிவேடு என்று அழைக்கப்படும் என்.ஆர்.சி.யை மேற்கு வங்கத்தில் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று மேற்கு வங்க சட்டமன்றத்தில் பேசிய மம்தா, “என்.ஆர்.சி என்ற குடிமக்கள் தேசியப் பதிவேடு என்பது பாஜக ஆட்சியின் பழிவாங்கல் நடவடிக்கையைத் தவிர வேறில்லை. ஆகவே இதனை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.
என்.ஆர்.சி. என்பது பொருளாதாரச் சரிவு நிலையை திசைத்திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். நாட்டில் பாஜகவுக்கு எதிராகப் பேச ஒருவர் கூட இல்லை என்பதுதான் இன்றைய நிலை” என்றார்.
அசாம் மாநிலத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேடு இறுதி பெற்று அறிவிக்கப்பட்டதையடுத்து சுமார் 19 லட்சம் பேர் அரசற்றவர்களாகியுள்ளனர். ஆனால் இவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபித்து மீண்டும் பட்டியலில் இணையலாம் என்றும் இதற்காக 300 அயல்நாட்டினர் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பல உரிமைகள் அமைப்புகள் என்.ஆர்.சி. என்பது முழுமையானதல்ல, பலர் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டுள்ளனர் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் ஹலேஜா மீது எஃப்.ஐ.ஆர்.களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி மேற்கு வங்க்த்தில் இது ஒருக்காலும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.