புதுடெல்லியில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய திகார் சிறைச்சாலை. 
இந்தியா

ஆசியாவிலேயே மிகப்பெரிய திஹார் சிறைச்சாலையில் 17 ஆயிரம் கைதிகள்: அதிகாரிகள் தகவல் 

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறை, 14 ஆயிரம் விசாரணைக் கைதிகள் உள்ளடக்கி மொத்தம் 17 ஆயிரம் கைதிகளைக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், 74வது பிறந்தநாளுக்கு 10 நாட்களே உள்ள நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று 'நீல காவல் பேருந்தில்' 18 கி.மீ தூரத்தில் உள்ள ரூஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து திகார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.

கடந்த ஆண்டு இதே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவரது மகன் கார்த்தி சிறை எண் 7 இல் 14 நாட்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.

இங்குள்ள சிறை எண்.7ல்தான் பொதுவாக அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்குகளை எதிர்கொள்ளும் கைதிகள் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.

திகார் சிறையில் 14 ஆயிரம் விசாரணைக் கைதிகள் உள்ளிட்ட மொத்தம் 17,400 கைதிகளைக் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாக விளங்குகிறது.

டிசம்பர் 31, 2018 வரை, 14,938 ஆண்கள் மற்றும் 530 பெண் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் - இது டிசம்பர் 31, 2017 நிலவரப்படி ஒப்பிடும்போது 2.02 சதவீதம் அதிகரித்துள்ளது.

விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை (1.67 சதவீதம்) அதிகரித்ததன் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது குற்றவாளிகளின் எண்ணிக்கையில் 2.23 சதவீதம் அதிகரித்துள்ளது.

மறைந்த காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி, முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு யாதவ், தொழிலதிபர் சுப்ரதா ராய், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல உயர் கைதிகள் திகார் சிறைச்சாலையில் இருந்துள்ளனர்.

இதுபோலேவே கொடூர கொலை குற்ற வழக்குகளில் தொடர்புடைய சோட்டா ராஜன், சார்லஸ் சோப்ராஜ், நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

SCROLL FOR NEXT