புதுடெல்லி,
கண்ணய்யா குமார் மீதான தேசத்துரோக வழக்குக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக டெல்லி அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் இருந்து வெளியாகும் சில பத்திரிகைகளில் கண்ணய்யா குமாரை விசாரிக்க டெல்லி போலீஸாருக்கு கேஜ்ரிவால் அரசு அனுமதி மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால், "இந்த விவகாரத்தில் டெல்லி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சில செய்திகள் யூகங்கள் அடிப்படையில் வெளியாகியுள்ளன.
டெல்லி அரசின் உள்துறை அமைச்சகம் இந்த வழக்கின் அனைத்து உண்மைகளையும் தீர ஆராய்ந்து உரிய நடவடிக்கையை எடுக்கும். இதில் அரசியல் தலையீடு நிச்சயமாக இருக்காது" எனக் கூறியுள்ளார்.
சர்ச்சையின் பின்னணி:
கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக கடைப்பிடித்தனர்.
அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் அப்போதைய மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிபிஐ தரப்பில் 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கண்ணய்யா குமாரை சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த டெல்லி அரசு போலீஸுக்கு அனுமதி வழங்காமல் மறுத்ததாக வெளியான செய்தியைத்தான் கேஜ்ரிவால் தற்போது மறுத்திருக்கிறார்.
-ஏஎன்ஐ