கோப்புப் படம் 
இந்தியா

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல செலுத்திய ரூ.10 கோடி: மேலும் 3 மாதங்களுக்கு டெபாசிட் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி
ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல செலுத்திய 10 கோடி ரூபாயை மேலும் 3 மாதங்களுக்கு கையிருப்பதாக வைத்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கட்டணி ஆட்சியில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு முதலீடு கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் கார்த்தி சிதம்பரம் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்குச் செல்ல அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கியது. மேலும் வைப்புத்தொகையாக 10 கோடி ரூபாயை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின் அவர் வைப்பு தொகையை திருப்பி அளிக்குமாறு கோரினார். ஆனால் 3 மாதங்கள் வரை அதனை கையிருப்பில் வைக்க நீதிமன்ற கரூவூலத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பணத்தை திரும்பி தரக்கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் வழக்கு மற்றும் சில முக்கிய சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது பெயரில் செலுத்தப்பட்ட ஜாமீன் தொகையை உடனடியாக திருப்பி அளிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கார்த்தி சிதம்பரம் செலுத்திய 10 கோடி ரூபாயை மேலும் 3 மாதங்களுக்கு நீதிமன்ற கருவூலத்தில் டெபாசிட்டாக தொடர்ந்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

SCROLL FOR NEXT