புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சிக்கு 'குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம் ஆத்மிக்கு குட் பை சொல்லிவிட்டு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான தருணம் வந்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகால ஆம் ஆத்மியுடனான பயணம் சிறந்த படிப்பினையைக் கொடுத்தது. அனைவருக்கும் நன்றி" என ட்வீட் செய்துள்ளார்.
சமீப காலமாகவே அவர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 50 நிமிடங்கள் அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்த நிலையில் அவர் தற்போது ஆம் ஆத்மி குறித்து பதிவு செய்திருக்கும் ட்வீட் முக்கியத்துவம் பெறுகிறது.
யார் இந்த அல்கா?
ஆம் ஆத்மி கட்சியின் சாந்தினி சவுக் தொகுதி பெண் எம்எல்ஏ அல்கா லம்பா. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்குப் பின் கட்சியின் நிறுவனரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து எம்எல்ஏக்களுக்கான கட்சி தொடர்பான அதிகாரபூர்வமான வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து அலோக் லம்பா நீக்கப்பட்டார். மேலும், மக்களவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யவும் மறுத்துவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
- ஏஎன்ஐ