ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிராக வதந்திகள் பரவி வன்முறை ஏற்படக்கூடும் என்பதால் அம் மாநிலத்தில் ஏராளமான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. தொலை பேசி சேவை முடக்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக அங்கு இயல்புநிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று கூறும்போது, “காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேலும் 19 தொலைபேசி இணைப்பகங்கள் வியாழக்கிழமை காலை செயல் பாட்டுக்கு வந்தன. நகரில் வர்த்தகப் பகுதியான லால் சவுக் மற்றும் பிரஸ் காலனியில் சாதாரண தொலைபேசி இணைப்புகள் செயல்படுகின்றன. என்றாலும் மொபைல் போன் சேவை மற்றும் இணையதள சேவை முடக்கத்தை நீக்குவது பற்றி இதுவரை முடிவு எடுக் கப்படவில்லை” என்றனர்.
இதனிடையே காஷ்மீர் பள்ளத் தாக்கில் நேற்று 32-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எனினும் தனியார் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருந்தது.
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர். அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் பொது வாகனப் போக்குவரத்து முடங்கியிருப்ப தால் ஊழியர்களின் வருகை குறைவாக உள்ளது.
நகரில் கடந்த மாதம் 6-ம் தேதி போராட்டக்காரர்கள் பாது காப்பு படையினர் இடையிலான மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் நேற்று உயிரிழந்தார். இதையொட்டி நகர் முதுநகர் பகுதியில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. -பிடிஐ