தெலங்கானா மேலவைத் தேர்தலின் போது லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தெலங்கானா மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய அக்கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி, நியமன எம்எல்ஏவிடம் ரூ.5 கோடி பேரம் பேசினார். அதில் முன்பணமாக ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படு கிறது.
இந்த விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவரது தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவை தெலுங்கு தொலைக்காட்சி சேனல்கள் சில வெளியிட்டன. இதையடுத்து தெலங்கானா அரசு தொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக, மத்திய அரசிடம் ஆந்திர அரசு புகார் அளித்தது. ஆந்திராவில் உள்ள 87 காவல் நிலையங்களில் தெலங்கானா முதல்வர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து சிபிஐ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதே வழக்கில் தொடர்புள்ளதாக கம்மம் மாவட்டம் சத்தபல்லி தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ வெங்கட வீரய்யாவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2 முறை நோட்டீஸ் அனுப்பினர்.
உடல்நிலை சரியில்லாததால் 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்த வெங்கட வீரய்யா, நேற்று காலை ஹைதராபாதில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் விசாரணைக்காக ஆஜரானார்.
அவரிடம் 75 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சுமார் 7 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் வெங்கட வீரய்யாவை முக்கிய குற்றவாளியாக கருதிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதனால் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி - எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் இடையே மீண்டும் மோதல் வலுவடைந்துள்ளது.