இந்தியா

’ரயில் பாடகி’ ரானு மொண்டால் குறித்து லதா மங்கேஷ்கர் கருத்து: நெட்டிசன்கள் விமர்சனம்

செய்திப்பிரிவு

மும்பை

ரயிலில் பாடி பிரபலமடைந்த ரானு மொண்டால் குறித்து பாடகி லதா மங்கேஷ்கர் தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் கொல்கத்தா ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ரானு மொண்டால் என்ற ஆதரவற்ற பெண் பிரபல இந்திப் பாடகியான லதா மங்கேஷ்கரின் 'ஏக் பயார் கா நக்மா ஹா' என்ற பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதன் மூலம் ரானு சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்தார். அவர் பாலிவுட்டில் பாட வேண்டும் என்று பலரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ரானு பாலிவுட்டில் பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் விருந்தினராகவும் கலந்து கொண்டார்.

ரானுவுக்கு இந்திப் படம் ஒன்றில் பாடும் வாய்ப்பை பிரபல இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா வழங்கினார். அது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ரானு மொண்டால் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பழம்பெரும் இந்திப் பாடகி லதா மங்கேஷ்கர் கூறுகையில், ''என்னுடைய பெயரால் ஒருவர் பலனடைந்தால் அது என்னுடைய அதிர்ஷ்டம். ஆனால் ஒருவரை நகலெடுப்பது என்பது நிலையான நீடித்த வெற்றியைத் தராது என்று நினைக்கிறேன். என்னுடைய பாடல்களையோ, கிஷோர் குமார், முஹம்மது ரஃபி, முகேஷ், ஆஷா போன்ஸ்லே பாடல்களையோ பாடிக்கொண்டிருந்தால் அவர்களுக்கு குறுகிய கால வெற்றிதான் கிடைக்கும். எத்தனையோ குழந்தைகள் ரியாலிட்டி ஷோக்களில் பாடுகிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு எத்தனை பேருடைய பெயர்கள் நமக்கு நினைவிருக்கிறது. எனக்கு சுனிதி சவுஹனையும், ஷ்ரேயா கோஷலையும் மட்டுமே தெரியும்.

அசலாக இருங்கள். என் தங்கை ஆஷா போன்ஸ்லே என்னை நகலெடுத்திருந்தால் கடைசி வரை என்னுடைய நிழலாகவே இருந்திருப்பார். தனித்தன்மை எவ்வளவு தூரம் ஒருவரைக் கொண்டு செல்லும் என்பதற்கு ஆஷாவே பெரிய உதாரணம்'' என்று லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்தை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT