மும்பை
மும்பையில் கடும் மழை காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் இண்டிகோ விமானம் ஒன்று மட்டும் தனது தனது பயணிகளைத் தொடர்ந்து விமானத்திலேயே அமருமாறு கட்டாயப்படுத்தியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மும்பை நகரத்தில் தொடர்ச்சியான மழையைத் தொடர்ந்து விமான நிலையத்தில் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து விமானங்களை இயக்க முடியாத சூழ்நிலையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட 20 விமானங்களில், பெரும்பாலானவை இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்தவை ஆகும்.
ஆனால் ரத்து அறிவிப்பு வந்தபிறகும் கூட இண்டிகோவைச் சேர்ந்த விமானம் ஒன்று பயணிகளை இருக்கையிலேயே அமருமாறு கட்டாயப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் பிடிஐயிடம் தெரிவிக்கையில், ''புதன்கிழமை இரவு நான் செல்லவேண்டிய இண்டிகோ விமானம் இரவு 7.55 மணிக்கு ஜெய்ப்பூருக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டது. மழையின் காரணமாக இந்த விமானம் இன்று காலை 6 மணிக்குப் புறப்பட்டு காலை 8 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. நான் நள்ளிரவில் விமானத்தில் ஏறினேன். ஆனால் அனைத்துப் பயணிகளும் இன்று காலை புறப்படும் வரை விமானத்தில் அமர்ந்திருந்தனர், இரவு உணவும் வழங்கப்படவில்லை. பயணிகள் ஓடுதளத்திற்கே வந்து கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். யாரோ ஒருவர் சிஐஎஸ்எஃப் காவலரை போனில் அழைத்தார்'' என்றார்.
இச்சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பயணிகளை மோசமாக நடத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட கேள்விக்கு இண்டிகோ நிர்வாகம் அளித்த பதிலில், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை குறித்த தகவலுக்காக குறிப்பிட்ட அந்த விமானம் காத்திருந்ததாகக் கூறியுள்ளது.