புதுடெல்லி,
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதத் தொகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் அதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில், ரூ.15,000 மதிப்புள்ள ஸ்கூட்டியை ஓட்டிச் சென்ற நபர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவருக்குப் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது பரவலாக விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் செய்தியாளர்கள் போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "அபராதத் தொகையை அதிகப்படுத்துவது அரசின் விருப்பமல்ல. போக்குவரத்து விதிமீறலுக்காக ஒருவர்கூட அபராதத்துக்கு உள்ளாகக் கூடாது என்பதே எங்களின் இலக்கு. சட்டத்தின் மீது மதிப்பும், அச்சமும் ஏற்படுத்தவே அதிக தொகையை நிர்ணயித்துள்ளோம்.
நம் தேசத்தில் ஓராண்டுக்கு சராசரியாக 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளில் இறப்பவர்களில் அதிகமானோர் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். மக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டாமா? அதற்குத்தான் இந்த அபராத விதிப்பு" என்று விளக்கினார்.
-ஏஎன்ஐ