புதுடெல்லி,
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாருக்கு வரும் 13-ம் தேதி வரை அமலாக்கப் பிரிவு காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கனகபுரா தொகுதி எம்எல்ஏ டி.கே. சிவகுமார். முந்தைய காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார். சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் செய்ததாக டி.கே. சிவகுமார், ஹனுமந்தப்பா, கர்நாடக பவனில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பாக 3 முறை சிவகுமாரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக 4-வது முறையாக சிவகுமார் அழைக்கப்பட்டார்.
அப்போது, போதுமான முகாந்திரங்கள் இருப்பதாகக் கூறி சிவகுமாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, நேற்று சிவகுமாரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் முன் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், " சிவகுமார் மீது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற, அவரை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் முழுமையான விவரம் தெரியவரும். ஆதலால் 14 நாட்கள் அமலாக்கப் பிரிவு காவலுக்கு அனுமதிக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகுமார் தரப்பு வழக்குரைஞர், அமலாக்கத்துறை முன்பு சிவகுமார் பலமுறை ஆஜராகியுள்ளார். அவரிடம் ஏற்கெனவே 33 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. எனவே, மேலும் காவலில் வைத்து விசாரிக்கத் தேவையில்லை என்றார்.
எனினும் இதனை ஏற்க மறுத்த நீதிபதி அஜய் குமார், சிவகுமாரை செப்டம்பர் 13-ஆம் தேதி வரை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.
இதனிடையே டி.கே.சிவகுமார் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் "இந்த நாட்டில் சட்டத்தைக் காட்டிலும் அரசியல் பழிவாங்கல்தான் வலிமையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
பிடிஐ