புதுடெல்லி
ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவராக அசோக் தன்வர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஹரியாணா விவகாரங்களுக்கான பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அசோக் தன்வருக்கு பதிலாக அவரது பதவியில் குமாரி செல்ஜா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஹரியாணா மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் மேலாண்மைக் குழு தலைவராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளை சமாதானம் செய்யும் முயற்சியாக கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹரியாணா மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 47 இடங்களில் வென்று பாஜக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 15 இடங்களில் மட்டுமே வென்றது. இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களில் வென்றது. ஆனால் பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்தது. -பிடிஐ