புதுடெல்லி,
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி நிறுவனம் ஹரியாணா மாநிலத்தில் உள்ள குருகிராம், மனேசர் தொழிற்சாலையில் கார் உற்பத்தியை 2 நாட்களுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 7-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரு தொழிற்சாலைகளிலும் பயணிகள் கார் உற்பத்தி நிறுத்தப்படும். இந்த இரு நாட்களும் உற்பத்தி இல்லாத நாட்களாக கருதப்படும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் இந்த அறிக்கையால், பங்குச்சந்தையில் அதன் பங்குகள் 2.5 சதவீதம் அளவுக்குச் சரிந்தன. நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து 7-வது மாதமாக ஆகஸ்ட் மாதம் வரை தனது உற்பத்தியைக் குறைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தனது உற்பத்தியை 33 சதவீதம் குறைத்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி நிறுவனம் 1,11,370 யூனிட்கள் உற்பத்தி செய்து இருந்தன. ஆனால், இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,68,725 யூனிட்கள் உற்பத்தி செய்தன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சஸுகி நிறுவனத்தின் விற்பனை மூன்றில் ஒருபங்காகக் குறைந்து 1,06,413 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் 1,58,189 யூனிட்கள் விற்பனையாகி இருந்தன.
உள்நாட்டு அளவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை 34.3 சதவீதம் கடந்த ஆகஸ்ட் மாதம் குறைந்து 97 ஆயிரத்து 61 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,47,700 யூனிட்கள் விற்பனையாகி இருந்தன. விலை குறைவான சிறிய ரக கார்களான அல்டோ, வாகன விற்பனை 71 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ