இந்தியா

எது நாடாளுமன்ற ஜனநாயகம்?

ஆகார் படேல்

நாடாளுமன்றம் கூடும் இடம் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை. அதை பராமரிக்கும் பொறுப்பு வகிக்கும் அதிகாரி பிளாக் ராட் என்கிற பொதுப் பெயரில் அழைக்கப்படுவார். பிரிட்டனில் முடியாட்சி இருந்த காலத்தில் இருந்து ஒரு வழக்கம் உண்டு. நாடாளுமன்றம் தொடங்கும் முதல்நாளில் பிரதிநிதிகள் அவைக்கு (கீழவை) வரும் பிளாக் ராட், “மேன்மை பொருந்திய நமது மகாராணி அவர்கள், பிரபுக்கள் அவையில் (மேலவை) பேச இருக்கிறார். அதற்கு நீங்கள் அனைவரும் வர வேண்டும்” என்று தலைவணங்கி கூறுவார். இது அங்குள்ள நடைமுறை. ஆனால் லேபர் கட்சி எம்.பி.யும், மன்னராட்சி நடைமுறைக்கு எதிரானவருமான டென்னிஸ் ஸ்கின்னர் இந்த நடைமுறையை கேலி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவையில் பிளாக் ராட் மகாராணியின் புகழை பாட தொடங்கியதுமே டென்னிஸ் ஸ்கின்னர் அதில் குறுக்கீடு செய்வார். அது ஒரு வரியில் இருந்தாலும் ராணியை ஏளனம் செய்யும் நகைச்சுவையாக இருக்கும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம்.

கடந்த வெள்ளிக்கிழமை நமது நாடாளுமன்ற நடவடிக்கை களை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தபோது டென்னிஸ் ஸ்கின்னரின் நகைச்சுவையான பேச்சு நினைவுக்கு வந்தது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை பதவி நீக்கம் செய்யாவிட்டால் அவையை நடத்தவிடமாட்டோம் என்று கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். பொருளாதார குற்றத்தில் சிக்கி லண்டனுக்கு தப்பி ஓடிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சுஷ்மாவும், வசுந்தராவும் பல்வேறு வகையில் உதவியாக இருந்தார்கள் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டு. இந்த விஷயத்தில் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை என்ற பிரதமர் மோடியின் நிலைப் பாடுதான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொந்தளித்து எழ காரணம்.

இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ளும் முறை நியாயமானதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே வெளிப்படை. நாடாளு மன்றம் என்பது மக்கள் பிரச்சினைகள் குறித்தும், நாட்டின் நிலைமை குறித்தும் விவாதம் நடத்தி அதற்குரிய சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்கவேண்டிய உன்னத இடம். மாறாக, அரசுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் இடமாக அதை காங்கிரஸ் மாற்றி விட்டது.

அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவேகமான அரசியல் நடத்துகிறதா என்று கேட்டால் அதற்கு ஆமாம் என்பதுதான் பதில். ராகுல் காந்தி சிறந்த நாவன்மை மிக்கவர் அல்ல. இது போன்ற பேச்சாளர்களை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியால் விவாதம் செய்து வெல்ல முடியாது. மக்களவையில் 44 எம்.பி.க்களை மட்டுமே கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி. எனவே விவாதத்தில் எதிரியை வீழ்த்தி தங்களை நிலைநிறுத்திக் கொள்ள அதனால் முடியாது. அமளி என்ற ஆயுதத்தை கையில் எடுக்காவிட்டால், நாடாளுமன்றத்தில் கண்டு கொள் ளப்படாதவர்களாக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிலைமை மாறிவிடும். எப்படியானாலும் காங்கிரஸ் கட்சியானது நீண்டநாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்க முடியாது. ஆக, இதுவும் ஒரு அரசியல் தந்திரம்தான். இத்தகைய நடவடிக்கைகளால் ஊடகங்கள் மற்றும் வெகுஜனங்கள் மத்தியில் தாம் இருப்பதை காங்கிரஸ் காட்டிக் கொள்ள முடியும்.

எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள், மறுத் தால் அவையை நடத்த அனுமதிக் கமாட்டோம் என்பது போன்ற செயல்களை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடாளுமன்றங்களில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கூட்டணி அரசு, சரியான பாதையைவிட்டு விலகிவிட்டது என்றே கூற வேண்டும். கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே அவையை சுமுகமாக நடத்த உரிய முன்னேற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததற்கு காரணம் காங்கிரஸின் கோரிக்கையை அது வலுவடையச் செய்யும் என்று எண்ணியிருக்கலாம். தாம் கையில் எடுத்துள்ள லலித் மோடி விவகாரம் நீர்த்துப் போனாலும், நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் வேறு பிரச்சினையை எழுப்புவது உறுதி.

நாடாளுமன்றத்தை முடக்கு வதற்கு எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்புவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக மாறிவிட்டது. இதே வழக்கத்தை பாஜகவும் கையாண்டுள்ளது.

தற்போதைய கூட்டத் தொடர் சுத்தமாக முடங்கிவிடும் என்றுதான் தோன்றுகிறது. காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் கூச்சலிட, அதை பாஜக எம்.பி.க்கள் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் இருக்காது. மசோதாக்கள் ஏதும் நிறைவேறாது. ஊடகங்கள் தங்கள் பங்குக்கு பல்வேறு ஊக செய்திகளை சுவாரசியமாக அளித்துக் கொண்டிக்கும். இதுதான் நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை என்று மக்கள் அசைபோட்டுக் கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT