அயோத்யா
பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுத்தவர்களில் முக்கியமானவரான இக்பால் அன்சாரி மீது தாக்குதல் நடத்தப் பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி நில விவகாரம் தொடர்பாக பலரும் வழக்கு தொடுத்துள்ளனர். இதில் முக்கியமானவர் இக்பால் அன்சாரி. இந்த வழக்குகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று பிற்பகல் அயோத்யாவிலுள்ள இக்பால் அன்சாரி வீட்டுக்கு 2 பேர் வந்தனர். கணவன், மனைவி போல வந்த அந்த 2 பேரும் இக்பால் அன்சாரியை அடித்து உதைத்த பின்னர் கொலை மிரட்டலும் விடுத்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அன்சாரி கூறும்போது, “அந்த பெண் தன்னை வர்த்திகா சிங் என்றும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் வீராங்கனை என்றும் கூறிக்கொண்டார். எனக்கு சந்தேகம் வராததால் அவர்களை வீட்டுக்கு உள்ளே அழைத்தேன். ஆனால் உள்ளே வந்த அவர்கள் 2 பேரும் என்னை அடித்து உதைத்து விட்டு பாபர் மசூதி வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வதாக வர்த்திகா சிங் அப்போது மிரட்டல் விடுத்தார். அவர்களிடமிருந்து என்னை எனது பாதுகாவலர் காப்பாற்றினார்” என்றார். இந்தத் தாக்குதலில் இக்பால் அன்சாரிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து பைசாபாத் போலீஸ் எஸ்.பி. விஜய் பால் சிங் கூறும்போது, “இதுதொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். தாக்கிய 2 நபர் களையும் நாங்கள் பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதா, அவர்கள் யார் என்ற விவரங் களை பிறகு தெரிவிக்கிறோம்” என்றார். - பிடிஐ