பசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படும் எனப் பேசி சர்ச்சையில் சிக்கிய மத்திய கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரான கிரிராஜ் சிங் விமர்சனங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை எனக் கூறியுள்ளார்.
முன்னதாக மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற 'மதர் டெய்ரி' நிறுவனத்தின் விழாவில் பேசிய அவர், "பசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
அதாவது பசு மாடுகளின் ஆண், பெண் கன்றுகள் ஈனும் விகிதத்தை உறுதி செய்யும் ஐவிஎஃப் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம், பசுக்கள் மட்டுமே பிறந்து விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பசு உற்பத்தி தொழிற்சாலை அரசு அமைக்கும்" என்று பேசியிருந்தார்.
விளக்கம் கூறிய அமைச்சர்:
இது பரவலாக விமர்சனத்துக்குள்ளான நிலையில், "என்னைப் பற்றி யார் என்ன அவதூறு பேசினாலும் எனக்குக் கவலையில்லை. நான் எனது வேலையில் கவனமாக இருக்கிறேன். இனிவருங் காலங்களில் விலங்குகளுக்கும் மனிதர்களைப் போல் ஐவிஎஃப் முறையில் சந்ததியைப் பெருக்க வழியிருக்கிறது.
இதன் நோக்கம் பசுவில் சிறந்த இனத்தை விருத்தி செய்வது. அதனால்தான் பசு தொழிற்சாலை அமைக்கப்படும் என்றேன். ஆனால் அதில் சிலருக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் முதலில் எனது கருத்துகளின் சாராம்சத்தைப் புரிந்து கொண்டு என்னை விமர்சிக்கட்டும்.
அமெரிக்காவில் இந்த முறையில் பசுவை இனவிருத்தி செய்யும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறாக செய்வதன் மூலம் பசு பாதுகாவலர்களின் கும்பல் வன்முறையையும் தடுக்க முடியும். பால் உற்பத்தி செய்யாத பசு இனங்கள்தான் வேறு காரணங்களுக்கு அவற்றை பயன்படுத்துவதற்கான இலக்காக உள்ளன.
அதனால்தான் பிரச்சினைகள் வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 30 லட்சம் டோஸ் செயற்கை கருவூட்டல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.