மும்பை
மும்பை அருகே ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து வாகனங்கள் மற்றும் சமையல் காஸ் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை அருகே உரானில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.
இங்கு இன்று காலை வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஆலையில் கச்சா எண்ணெய் கழிவுகள் சேமித்து வைக்கும் கிணற்றில் தீப்பற்றியது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் தீ வேகமாக பரவியது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பகுதி என்பதால் தீ வேகமாக பரவியது.
இதையடுத்து தீ பரவாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் எரிவாயு எடுத்துச் செல்லப்படும் குழாய்கள் வேகமாக மூடப்பட்டன.
ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசாரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 3 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 3 தொழிற்சாலை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள். ஒருவர் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிடும் ஓஎன்ஜிசி அதிகாரி ஆவார்.
இதனிடையே இந்த விபத்து காரணமாக மும்பையில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 7 லட்சம் வாகனங்களுக்கும், 12 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலமும் மகாநகர் காஸ் லிமிடெட் கம்பெனி மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. ஓஎன்ஜிசி ஆலை விபத்தை தொடர்ந்து காஸ் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் இயக்குவதும், வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்யப்படுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.