பாட்னா,
பிஹாரில் கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொழில் துறை மற்றும் பிஸ்கட் தொழில் துறையில் எந்தவித சுணக்கமும் இல்லை என அம்மாநில துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது, ஆட்டோமொபைல் உள்ளிட்ட 8 துறைகள் வீழ்ச்சி கண்டுள்ளன என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் பிஹார் துணை முதல்வர் சுஷில் மோடியின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) பாட்னாவில் வர்த்தகர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய சுஷில் குமார் மோடி, "இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
அது உண்மையாகவே இருந்தாலும்கூட பிஹாரில் ஆட்டோமொபைல் சந்தை எந்த சுணக்கமும் காணவில்லை. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இங்கு வாகன விற்பனை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை.
அதேபோல் சில பத்திரிகைகளில் மக்கள் பிஸ்கட் வாங்குவதைக்கூட நிறுத்திவிட்டதாக செய்திகள் வந்தன. ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பிஸ்கட் விற்பனை சரிவை வைத்து அப்படிக் கூறப்பட்டது. ஆனால் நான் பிஹாரில் உள்ள பிஸ்கட் உற்பத்தியாளர்களிடம் பேசினேன். அவர்கள் அனைவருமே பிஹாரிலும் சரி தேசிய அளவிலும் சரி பிஸ்கட் விற்பனை அதிகரித்திருப்பதாகவே கூறினார்கள்.
பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள்தான் மக்களை பீதியடையச் செய்கின்றன" எனக் கூறியுள்ளார்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5% என்றளவில் உள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஏஎன்ஐ