பாஜக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் 
இந்தியா

பாஜக தலைவர் சின்மயனாந்த் வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

உத்தரப் பிரதேச பாஜக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் மீது சட்டகல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பாக, ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த்(வயது72). இவர் மீது உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரைச் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில் தனக்கு சின்மயனாந்த் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்றும், ஏராளமான பெண்களை சின்மயானந்த் சீரழித்துள்ளார் என்று அந்த பெண் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் புகார் கூறிய மாணவி, வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். மேலும் தனக்கு உதவ வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 27-ம் தேதி போலீஸார் சின்மயனாந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த மாணவி வீடியோ வெளியிட்ட நிலையில் அப்போது இருந்து திடீரென காணமல் போனார். தங்கள் மகளைக் காணவில்லை என்று மாணவியின் பெற்றோரும் போலீஸில் புகார் அளித்து உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே ராஜஸ்தானில் தனது ஆண்நண்பருடன் இருந்த சட்டக்கல்லூரி மாணவியை போலீஸார் மீட்டு வெள்ளிக்கிழமை இரவு உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்விடம், " தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தனது நண்பர்களுடன் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றதாக" அந்தப் பெண் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணை, டெல்லியில் உள்ள சட்ட சேவைகள் ஆணையத்தின் வளாகத்தில் உள்ள காப்பகத்தில் உரிய பாதுகாப்புடன் 4 நாள்கள் தங்கவைக்க வேண்டும் என்றும்,

ஷாஜஹான்பூரில் உள்ள பெற்றோரை ஒரு போலீஸ் படையினர் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வந்து, அந்தப் பெண்ணைச் சந்திக்க வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் பின்னர் வழக்கு விசாரணையை வரும் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், " சட்டக்கல்லூரி மாணவி அளித்த 2 புகார்களையும் விசாரணை செய்வதற்கு ஐஜி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும், அதில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும், இந்த குழுவின் விசாரணயை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.


பிடிஐ

SCROLL FOR NEXT