பதான்கோட்,
இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி ஏஹெச்-64இ ரக போர் ஹெலிகாப்டர்கள் நாளை(செவ்வாய்கிழமை) இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன.
பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், போயிங் நிறுவனத்திடம் 22 அபாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் முதல்கட்டமாக 4 அப்பாச்சி அதிநவீன ஹெலிகாப்டர்கள் காசியாபாத் அருகே இருக்கும் ஹண்டன் தளத்தில் ஜுலை 27-ம் தேதி ஒப்படைக்கப்பட்டன.
அடுத்தகட்டமாக 4 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன. இந்த 8 ஹெலிகாப்டர்களும் நாளை இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அபாச்சி ஹெலிகாப்டரின் விலை ரூ.4,168 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு போயிங் நிறுவனத்துடன் இந்திய செய்த ஒப்பந்தத்தின்படி கூடுதலாக 14 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்திய விமானப்படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கையை 22 ஆக உயர்த்தவும், 2020-ம் ஆண்டில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக விமானப்படையில் தேர்வு செய்யப்பட்ட பைலட்கள் ஏற்கனவே அமெரிக்காவுக்கு சென்று பயிற்சி பெற்றுவந்துள்ளனர்.
நாளை நடக்கும் நிகழ்ச்சி குறித்து இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன. இதற்கான விழா பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடக்கிறது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வந்துவிட்டால், இந்திய விமானப்படையின் பலம் இன்னும் அதிகரிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிநவீன ஹெலிகாப்டர்களில் அப்பாச்சி ஏஹெச்-64இ ஹெலிகாப்டரும் ஒன்றாகும். போர்க்காலங்களில் சிறப்பாகச் செயல்படக்கூடிய வகையில் அப்பாச்சி ஏஹெச்-64இ ஹெலிகாப்டர்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் அதிநம்பிக்கையைப் பெற்றது அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள். போயிங் நிறுவனம் இதுவரை உலக நாடுகளுக்கு 2,200 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்கியுள்ளது. இந்தியா 14-வது நாடாக இந்த ஹெலிகாப்டரை வாங்கியுள்ளது.
பிடிஐ