காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: படம் ஏஎன்ஐ 
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: இடைக்கால ஜாமீன் வழங்கப்படா விட்டால் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் 5-ம் தேதிவரை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீனை விசாரணை நீதிமன்றம் வழங்காவிட்டால் சிபிஐ காவலை 5-ம் தேதிவரை நீடிட்டிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான வகையில் ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது உதவினார் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, கடந்த 21-ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது, முதலில் 5 நாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 26-ம் தேதி சிதம்பரத்துக்கான சிபிஐ காவலை செப்டம்பர் 2-ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே சிபிஐ தன்னை கைது செய்தது தவறு என்றும், கைது ஆணையை ரத்து செய்யக் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்கள், அதேபோல சிபிஐ தரப்பி்ல கூடுதல் சொலிசிட்டர் கே.எம்.நடராஜ் ஆஜராகி வாதாடினார்.

அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், " சிதம்பரம் தற்போது ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார்.
இந்த வழக்கில் ஜாமீன்வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்க முடியாது. ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாம் அல்லது வீட்டுக் காவலில் வைக்கலாம். அவரை திஹார் சிறைக்கு அனுப்பக் கூடாது. .அவருக்கு 74 வயதாகிவிட்டது. சிதம்பரத்துக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க வேண்டும். நாங்கள் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம்" எனத் தெரிவி்த்தார்

அப்போது சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நட்ராஜ் வாதிடுகையில், " சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதை எதிர்க்கிறோம். போலீஸ் காவல் அல்லது நீதிமன்றக் காவல் கூடாது என்று குற்றம்சாட்டப்பட்டவர் கூற முடியாது" எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் பானுமதி, போபண்ணா கூறுகையில், " வீட்டுக் காவலில் வைப்பதற்காக சிதம்பரம் அரசியல் கைதி அல்ல. இந்த வழக்கி்ல் விசாரணை நீதிமன்றத்தை அனுகி இடைக்கால ஜாமீனை ப.சிதம்பரம் தரப்பு கோர முடியும். ஒருவேளை இடைக்கால ஜாமீனை விசாரணை நீதிமன்றம் மறுக்கும் பட்சத்தில் சிபிஐ காவலை 5-ம் தேதி வரை நீட்டிக்கிறோம்" என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT