குவஹாட்டி,
அசாம் மாநிலத்தில் வெளியான, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதையடுத்து, புள்ளிவிவரங்களை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாட பாஜக முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாமில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளதாக புகார் உள்ளது. இதை யடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இந்திய குடியுரிமை பெற்றவர் களை அடையாளம் காண்பதற் காக தேசிய குடிமக்கள் பதி வேடு (என்ஆர்சி) தயாரிக்கப் பட்டது.
இதன் இறுதிப் பட்டியல் சனிக்கிழமை வெளி யிடப்பட்டது. மொத்தம் 3.3 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 19 லட்சத்துக்கும் மேற் பட்டோரின் பெயர்கள் இப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் பட்டியலில் விடுபட்டவர் களின் நிலை கேள்விக்குறியானது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறுகையில், "அசாமில் வெளியிடப்பட்டுள்ள என்ஆர்சி இறுதிப் பட்டியலில் இடம்பெறாத தனிநபர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் தங்களுக்கு சட்டப்படி இறுதித் தீர்வு கிடைக்கும் வரை இப்போது பெற்று வரும் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிக்கலாம்.
இப்பட்டியலில் விடுபட்டவர் கள் சட்டப்படி நாடற்றவராகவோ வெளிநாட்டவராகவோ கருதப்பட மாட்டார்கள். அவர்கள் இதற்கு முன்பு பெற்று வந்த எந்த உரிமையும் இப்போதைக்கு பறிபோகாது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியலில் ஏராளமான குறைபாடுகள், குளறுபடிகள் இருப்பதால் மாநில பாஜகவும், மத்திய பாஜகவும் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வங்கதேச எல்லையில் இருக்கும் மாவட்டங்களி்ல் மாதிரி புள்ளிவிவரங்களில் 20 சதவீதத்தை மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்தக் கோரி அசாம் நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கோரியுள்ளார். மேலும் அசாமில் 10 சதவீத புள்ளிவரங்களை மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றம் அனுக பாஜக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பெரும்பாலான எல்லைப்புற மாவட்டங்களில் மக்கள் அடர்த்தி அதிகமாகும். அங்கு பெரும்பாலும் சட்டவிரோதமாக வந்த வங்கதேசத்தினர் இருக்கின்றதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர்கள் என்ஆர்சி பட்டியலுக்குள் வந்திருப்பது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குளறுபடி காரணமாக பாஜகவுக்கும், என்ஆர்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜிலாவுக்கும் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அசாம் நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், " என்ஆர்சி இறுதிப்பட்டியலைப் பார்த்து நம்பிக்கை இழந்திருக்கிறோம். உண்மையான இந்தியர்கள் பலருக்கு இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ்