கொல்கத்தா
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 1 லட்சம் கூர்கா பிரிவினர் பெயர் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித் துள்ளார்.
அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இறுதிப் பட்டியல் நேற்று முன்தினம் வெளி யிடப்பட்டது. இதில் அம்மாநிலத் தைச் சேர்ந்த 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்ஆர்சி பட்டியலில் கூர்கா இனத்தைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெற வில்லை என தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், சிஆர்பிஎப் வீரர்கள், குடியரசு முன்னாள் தலைவர் பக்ருதீன் அலி அகமது குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இந்தியர்களின் பெயர்களும் விடுபட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
உண்மையான இந்தியர்களின் பெயர்கள் என்ஆர்சி பட்டியலில் இடம்பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத் தில் நமது இந்திய சகோதர சகோதரிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தப் பட்டியல் வெளியான நேற்று முன்தினம், அதிகப்படியான வங்க மக்களின் பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெறாததற்கு மம்தா பானர்ஜி கவலை தெரிவித்திருந்தார்.