புதுடெல்லி,
பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மையைத் தடுக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நாடு முழுவதும் அம்மா உணவகம் போல் சமுதாய உணவுக்கூடம் அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்த மனுவை சமூக ஆர்வலர்கள் அனுன் தவண், இஷான் சிங், குனாஜன் சிங் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஷிமா மண்டலா மற்றும் புஸைல் அகமது அயூபி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் மனுதாரர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''நாட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் நாள்தோறும் பட்டினியாலும், ஊட்டச்சத்துக் குறைவாலும் இறக்கும் நிலை, அடிப்படை உரிமைகள் மீறுவதாகும். அடிப்படை உரிமைகள் படி குடிமக்களுக்கு உணவு உரிமையும், வாழும் உரிமையும் இருக்கும்போது ஊட்டச்சத்துக் குறைவால் இறக்கிறார்கள்.
மத்திய சார்பில் தேசிய உணவுக் கழகம் அமைத்து பொது விநியோகம் மூலம் உணவு வழங்கிட வகை செய்ய வேண்டும். மாநில அரசுகள் சார்பில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகாண்ட், ஜார்கண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் மானிய விலையில் அரசின் உதவியுடன் மக்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் சூப் கிச்சன், உணவு மையம், உணவுக் கூடம், சமுதாயக் கூடம் என பல்வேறு பெயர்களில் பசியுள்ள மக்களுக்கு உணவு இலவசமாகவும், சில நேரங்களில் சந்தை விலையைக் காட்டிலும் மிகக்குறைவாகவும் வழங்குகிறார்கள்.
மத்திய அரசின் சார்பில் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் பட்டினியைப் போக்கவும், ஊட்டச்சத்தின்மையைப் போக்கவும், பசிக்கு உணவிடவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் உண்மையில் அந்தத் திட்டங்கள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சர்வதேச மற்றும் இந்தியச் சட்டத்தின்படி ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பது அடிப்படை மனித உரிமை. அது கிடைப்பதற்காக சமுதாய உணவுக்கூடம் அமைத்து சத்துள்ள உணவு வழங்கி, பசியையும், ஊட்டச்சத்தின்மையையும் போக்க முடியும். அதன் மூலம் நோய்களையும், இறப்பையும் தடுக்க முடியும்.
பட்டினியால் இறந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை. பட்டினியால்தான் ஒருவர் இறந்துள்ளார் என்பதை அறிய வேண்டுமென்றாலும் அவரை உடற்கூறு ஆய்வு செய்துதான் அறிய முடியும். ஆனால் சர்வதேச அமைப்புகள் அளிக்கும் புள்ளிவிவரங்கள் படி, ஆண்டுக்கு 3 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் பட்டினியால் இறக்கின்றன எனத் தெரியவருகிறது. அதில் 38 சதவீதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது கவனிக்கத்தக்கது.
ஆதலால், சமுதாய உணவுக்கூடம் அமைத்தலை மாநில அரசுகள் உதவியுடனோ அல்லது கார்பபரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலமோ அல்லது தனியார் அரசு பங்களிப்பு மூலமோ ஏற்கெனவே இருக்கும் திட்டங்களோடு இணைத்து நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிடிஐ