தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன் : கோப்புப்படம் 
இந்தியா

5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் :முழுமையான விவரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

தெலங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா அங்கிருந்து மாற்றப்பட்டு ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருந்த பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங்கிற்கு பதிலாக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

பகத் சிங் கோஷ்யாரி : படவிளக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டுள்ளார். 77 வயதான பகத் சிங் கோஷ்யாரி உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளராக இருந்து பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்ககது

பண்டாரு தத்தாத்ரேயா :பட விளக்கம்

மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் தொழிலாளர்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.

72 வயதான பண்டாரு தத்தார்ரேயா தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். கடந்த வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியும் மத்திய அமைச்சராக இருந்த பண்டாரு தத்தாத்ரேயா, பிரதமர் மோடியின் 2014-ம் ஆண்டு ஆட்சியின் போது மத்திய தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர்.

கேரள மாநிலத்தின் ஆளுநராக இருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சதாசிவம் மாற்றப்பட்டு அங்கு, ஆரிஃப் முகமது கான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரிஃப் முகமது கான் : படம் விளக்கம்

உத்தரப் பிரதேசமாநிலம், புலந்தசாஹர் நகரைச் சேர்ந்த ஆரிஃப் முகமது கான் 1975-ம் ஆண்டில் இருந்து அரசியலில் இருந்து வருகிறார். தொடக்கத்தில் பாரதிய கிராந்தி கட்சியிலும், பின்னர் காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார்.

அதன்பின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்டவேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். ஜனதா தளம் கட்சியின் ஆட்சியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அதன்பின் அங்கிருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சென்று, கடைசியாக பாஜகவில் கடந்த 2004-ம் ஆண்டு இணைந்தார். பாஜகவில் 3 ஆண்டுகள் இருந்த முகமது கான் 2007-ம் ஆண்டு விலகினார். தற்போது எந்தக் கட்சியிலும் சாராமல் இருந்துவரும் முகமது கான் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய ஷா பானு வழக்கின் தீர்ப்பை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசியவர். முத்தலாக்கை கடுமையாக எதிர்த்த முகமது கான், 3 ஆண்டுகள் சிறை தண்டனை வேண்டும் என்று கோரியவர். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தையும் நீக்க வேண்டும் என குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏஎன்ஐ

SCROLL FOR NEXT