முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் : கோப்புப்படம் 
இந்தியா

நாட்டின் பொருளாதார நிலை ஆழ்ந்த கவலையளிக்கும் நிலையில் இருக்கிறது; தவறுகளில் இருந்து மீளவில்லை: மத்திய அரசு மீது மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு


புதுடெல்லி,

நாட்டின் பொருளாதாரம் ஆழ்ந்த கவலையளிக்கும் நிலையில் இருக்கிறது. மனிதத் தவறான பண மதிப்பிழப்பு மற்றும் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட் ஜிஎஸ்டி போன்றவற்றில் இருந்து பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது. பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவதைக் கண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த சூழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசை விமர்சித்து அறிக்கையும், வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பவதாவது:

''நாட்டின் பொருளாதாரம் இன்று ஆழ்ந்த, வேதனையளிக்கும் விதத்தில் இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக இருப்பது, வளர்ச்சி குறைந்திருப்பதைக் காட்டுகிறது.
வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு தகுதியானது நமது தேசம். ஆனால் அனைத்து வகையிலும் மோடி அரசின் தவறான, மோசமான நிர்வாகத்தால் இந்தப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உற்பத்தித் துறையில் வளர்ச்சி 0.6 சதவீதம் மட்டுமே இருப்பது வேதனையளிக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய மனிதத் தவறுகளான பண மதிப்பிழப்பு மற்றும் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி ஆகியவற்றில் இருந்து இன்னும் பொருளாதாரம் மீளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

உள்நாட்டில் தேவை மிகச்சோர்வடைந்து இருக்கிறது. நுகர்வின் வளர்ச்சியும் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியானது 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கிறது. வரிவருவாயில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

சிறிய, பெரிய வர்த்தகர்கள், தொழில்செய்வோர் அனைவரும் வரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்களின் மனநிலையும் உற்சாகம் இழந்து காணப்படுகிறது. பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு வருவதற்கு இதுபோன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் சரியாக இருக்காது.

பிரதமர் மோடி அரசின் கொள்கைகளின் விளைவால், வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் 3.50 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.
அதுபோல, அமைப்பு சாரா துறைகளிலும் மிகப்பெரிய அளவில் மக்கள் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக தொழிலாளர்கள் அதிகமாக வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர்.

கிராமப்புற இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு போதுமான விலையைப் பெறவில்லை. கிராமப்புற வருவாய் குறைந்துவிட்டது. மத்தியில் ஆளும் அரசில் தன்னாட்சி நிறுவனங்களின் சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கி தனது இருப்பில் இருந்து மிகப்பெரிய அளவுக்கு ரூ.1.76 லட்சம் கோடியை அரசுக்கு வழங்க உள்ளது. பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்க முடியாமல், திட்டமிடல் இல்லாமல் இருப்பது தெரிகிறது.

இந்த அரசின் கீழ் இந்தியாவின் புள்ளிவிவரங்கள் கூட கேள்விக்குள்ளாகி இருக்கின்றன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு வருவது சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் குலைக்கும். தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏற்றுமதியை இந்தியா அதிகப்படுத்தவில்லை. இதுதான் மோடி அரசின் கீழ் பொருளாதார நிர்வாகத்தின் நிலைமை.

நம்முடைய இளைஞர்கள், விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், விளிம்புநிலையில் இருப்போர் சிறப்பாக இருக்க வேண்டியவர்கள். தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சி சரிவில் செல்ல முடியாது. ஆதலால், பழிவாங்கும் அரசியலைத் தூரவைத்து விட்டு, அனைத்து விவேகமுள்ளவர்களின் ஆலோசனையை ஏற்று, சிந்தித்து, நம்முமுடைய பொருளாதாரத்தை மனதத் தவறுகளில் இருந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

SCROLL FOR NEXT