வினோத்
பெங்களூரு
முந்தைய காங்கிரஸ் அரசு பரிந் துரைத்ததைப் போல, கர்நாடகாவுக்கு தனிக் கொடி தேவையில்லை என அம்மாநில கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா, காஷ்மீரைப் போல கர்நாடகாவுக் கும் தனிக்கொடி வேண்டும் என முடிவெடுத்தார். இதற்காக வல்லு நர் குழுவை உருவாக்கி, கொடியை வடிவமைத்து அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றார். மத்திய அர சின் ஒப்புதலுக்கும் அனுப்பினார்.
இதற்கு இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில், கர்நாடகா வில் கடந்த ஜூலையில் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு பொறுப் பேற்றது. அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு தனிக்கொடி கோரு வதை திரும்ப பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி கூறுகையில், “நமது நாட்டுக்கு இருக்கும் கொடியே மாநிலங்களுக் கும் போதுமானது. ஒரு சில மாநிலங் கள் தங்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பல கொடி களை கொண்டிருந்தாலும், அரசிய லமைப்புச் சட்டத்தால் மூவர்ணக் கொடியே அங்கீகரிக்கப்பட்டுள் ளது. இந்தியர்கள் அனைவருக்கும் அந்த கொடி மட்டுமே போதுமானது.
முந்தைய காங்கிரஸ் அரசு கர்நாடக மாநிலத்துக்கு தனிக்கொடி வேண்டும் என விடுத்திருந்த கோரிக்கையை நாங்கள் திரும்ப பெற இருக்கிறோம். மஞ்சள் சிவப்பு வண்ண கொடியை கன்னடர்கள் கலாசாரக் கொடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். கர்நாடக மாநிலத்திற்கென்று தனியாக கொடி வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். அவ் வாறு தனிக்கொடி வைத்துக் கொள்ள அரசியலமைப்புச் சட்டத் திலும் இடமில்லை” என்றார்.
கன்னட விரோத நடவடிக்கை
இதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். அவர் கூறும்போது, “கர்நாடகாவுக்கு தனிக் கொடி உருவாக்குவதை பாஜக அரசு எதிர்ப்பது கன்னட விரோத நட வடிக்கை ஆகும். மாநிலங்கள் தனிக் கொடி வைத்துக்கொள்வதற்கு அரசியலமைப்பு சட்டம் தடை விதிக்கவில்லை. கர்நாடகாவுக்கு கன்னட மொழி வாழ்த்து பாடல் இருக்கும் போது, தனிக்கொடியை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்த விவகாரத்தில் பாஜக அரசும், அமைச்சர் சி.டி.ரவியும் கன்னடர்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கின்றனர். கர்நாடக அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு, தனிக் கொடியை பெற்றுத்தர வேண்டும்” என்றார்.