மங்களூரு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 21 நாடுகளின் கரன்சிகளைக் கொண்டு, 12 அடியில் விநாயகர் சிலை மங்களூருவில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் செப். 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெவ்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மங்களூருவைச் சேர்ந்த மணிபால் மணல் இதயக் குழு, கரன்சி நோட்டுகளைக் கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளது. இதை ஸ்ரீநாத் மணிபால், வெங்கி பலிமார் மற்றும் ரவி ஹிரபெட்டு ஆகிய 3 கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அவர்கள், ''இந்திய ரூபாய் நோட்டுகள் இதில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக இலங்கை, வங்கதேசம், சீனா, ஆப்கானிஸ்தான், பூடான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சில நாடுகளின் கரன்சிகள் இந்த சிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை சீரிய முறையில் கலை வடிவத்தில் அடுக்கி, விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளோம்.
இதற்கு முன்னதாக கையால் உருவாக்கிய காகிதங்கள், கைவினைப் பொருட்கள், பிஸ்கட்டுகள், தானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு விநாயகர் சிலைகளை உருவாக்கினோம். இம்முறை ரூபாய் நோட்டுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதை உடுப்பியில் உள்ள தொழில் வளாகம் ஒன்றில் காட்சிப்படுத்தி உள்ளோம்'' என்றனர்.