இந்தியா

இந்தியர்கள் வெளியேற்றம்; வெளிநாட்டினருக்கு இடமா?’’ - தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு தருண் கோகோய் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

திஸ்பூர்
தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியலில் நியாயமான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு, வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிபட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட 3,68,000 பேர் ஏற்கெனவே விண்ணப்பிக்கவில்லை அவர்களையும் சேர்த்து மொத்தம் 19,06,657 பேர் இறுதிபட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 22 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியலில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வங்கதேச இந்துக்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேசமயம் தவறான முறையில் வெளிநாட்டினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதே கருத்தை பாஜகவினர் சொல்கின்றனர்.

ஆனால் அசாமிலும், மத்திய அரசிலும் பாஜகவே பதவியில் உள்ளது. இந்த தவறு எப்படி நடந்தது என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இதற்கு அவர்களே பொறுப்பு. ஆனால் அவர்களும் எங்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது விநோதமாக உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT