புதுடெல்லி,
தனியார் துறையில் பல்வேறு பிரிவுகளில் வல்லுநர்களாக இருந்த 9 பேரைத் தேர்வு செய்து, பல்வேறு அமைச்சகங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில், இணைச் செயலாளர்களாக மத்திய அரசு நியமித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான நியமன அமைச்சரவைக் குழு இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களி்ல் நியமிக்கப்பட்ட இந்த 9 இணைச்செயலாளர்களும் அடுத்த 3 ஆண்டுகளுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பதவியில் இருப்பார்கள்
இந்த 9 இணைச்செயலாளர்களுக்கும் ஊதியம் 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் வழங்கப்படும். இவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து இவர்களின் நியமனம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வேளாண் துறையில் ககோலி கோஷ், விமானப் போக்குவரத்து துறையில் அமர் துபே, வணிகத்துறையில் அருண் கோயல், பொருளாதார விவகாரத்துறையில் ராஜீவ் சக்சேனா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் சுஜித் குமார் பாஜ்பாய், நிதிச்சேவையில் சவுரவ் மிஸ்ரா, புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் தினேஷ் தயானந்த் ஜகதலே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பிரிவில் சுமன் பிரசாத் சிங், கப்பல்போக்குவரத்து துறையில் பூஷன் குமார் ஆகியோர் இணையச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக ஒவ்வொரு துறையிலும் இணைச்செயலாளர்கள் அந்தஸ்தில் ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஎப்எஸ், ஐஆர்எஸ், ஆகியோர்தான் நியமிக்கப்படுவார்கள். ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு விடுத்த அறிவிப்பின்படி, இணைச்செயலாளர்கள் பதவிக்கு லேட்ரல் என்ட்ரி மூலம் விண்ணப்பங்களைப்பெற்று தனியார் துறையைச் சேர்ந்த வல்லுநர்களை நியமித்து வருகிறது
பிடிஐ