இந்தியா

பண்டிகைகளின் போது பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்படுமா?- மத்திய அரசு பரிசீலனை

செய்திப்பிரிவு

பண்டிகைகளின்போது பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக் கட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற வீரவிளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப் படும். இதைக் காண ஏராள மானோர் திரள்வார்கள், இது பொழுதுபோக்குக்காக மட்டும் இன்றி வீர விளையாட்டாகவும் நடத்தப்படுகிறது.

காளைகள் சித்ரவதைக்கு உள்ளாவதாகக் கூறி ஜல்லிக் கட்டுக்கும் மாட்டுவண்டி போட்டிக் கும் உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ல் தடைவிதித்தது. இதை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளை அனுமதிக்க சட்டத்தை திருத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்ட மிட்டுள்ளது.

இதுதொடர்பாக அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மகாராஷ்டிரத்தின் கோல்காபூரில் பேசியபோது, பாரம்பரிய விளையாட்டுகளுக்கு சட்டம் குறுக்கீடாக நின்றால் அதை திருத்த நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

அண்மையில் அவர் தமிழகத் துக்கு வந்தபோதும் இதே வாக்குறுதியை அளித்தார்.

எனினும் மத்திய அரசு அரசியல் ஆதாயத்துடன் காய் நகர்த்துகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியபோது, தமிழகம், கேரளாவில் பாஜகவை பலப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT