இந்தியா

85 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக 42 ஆண்டுகள் கட்டிய கால்வாய்: எலிகள் ஓட்டை போட்டதால் 24 மணிநேரத்தில் அடித்து சென்றது

செய்திப்பிரிவு

ராஞ்சி,

85 கிராம மக்களின் குடிநீருக்காக 42 ஆண்டுகள் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட கால்வாய் திறக்கப்பட்ட 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. கோனர் கால்வாய் நீர்பாசனத் திட்டம் என்ற பெயரில் கிரித், ஹசாரிபாக், போகரோ ஆகிய பகுதிகள் வழியாகச் செல்லும் கால்வாயை கடந்த புதன்கிழமைதான் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் மக்களுக்கு அர்ப்பணித்தார். ஆனால், 24 மணிநேரத்தில் அந்த கால்வாய் இருந்த இடம் தெரியாமல் போனது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். கடந்த 1978-ம் ஆண்டு பிஹார் மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்த போது, அப்போதைய ஆளுநர் ஜகந்நாத் கவுசால் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால், அதன்பின் பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து வந்த அரசுகளால் இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. 1978-ம் ஆண்டு இந்த கால்வாயின் திட்ட மதிப்பு ரூ.12 கோடி என்ற நிலையில், இப்போது கட்டி முடிக்கப்படும்போது ரூ.2500 கோடியாக அதிகரித்தது.

அதன்பின் 2003-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த அர்ஜுன் முண்டா வந்தபோது, இந்த கால்வாய்க்கு அடிக்கல் நாட்டி, நத்தை வேகத்தில் பணிகள் நடந்தன. ஆனால், மீண்டும் 2012-ம் ஆண்டு இந்த கால்வாய் கட்டுவதற்கு டெண்டர்விடப்பட்டு மும்பையைச் சேர்ந்த ஒருநிறுவனம் கால்வாயை கட்டத் தொடங்கியது.

மாநில நீர்பாசனத் துறையின் கணக்கீட்டின்படி, கால்வாயின் மொத்த நீளம் 404.17 கி.மீ, நீளமும், நாள் ஒன்றுக்கு 800 கனஅடி மூலம் தண்ணீர் திறக்க முடியும் அதிகபட்சமாக 1,700 கன அடி அளவு திறக்க முடியும் என்று அதிகாரிகள் திட்டமிட்டனர்.

ஏறக்குறைய 42 ஆண்டுகளாக பல்வேறு அரசுகளால் பணி நடந்து சமீபத்தில் கால்வாய் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள விஷ்னுகார்க் மண்டலத்தில் உள்ள பனாஷோ பகுதியில் கடந்த புதன்கிழமை மிகப்பிரமாண்டமான வகையில் இந்த கால்வாய் திறப்புவிழாவும், மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் விழாவும் நடந்தது. முதல் ரகுபர் தாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கால்வாயை மாநில மக்களுக்கு ஒப்படைத்தார்.

ஆனால், கால்வாயில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டவுடன் கால்வாய் அழுத்தம் தாங்காமல் 50 மீட்டர் உயரம் கொண்ட கால்வாயின் ஒருபகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டு உடைந்தது. கால்வாய் உடைந்த வேகத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து அருகில் உள்ள கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களிலும் புகுந்து ஏராளமான பயிர்களை நாசம் செய்தது.

இதுகுறித்து கோனார் கால்வாய் பராமரிப்பின் பொறியாளர் வி.கே. சிங் கூறுகையில், "இந்த கால்வாய் உடைந்ததற்கு முக்கியக் காரணம் அதிகமான அழுத்தத்தில் தண்ணீர் வெளியேறதே என்று கண்டுபிடித்துள்ளோம். மூத்த அதிகாரிகள் கால்வாய் உடைந்தது குறித்து மதிப்பிட்டு வருகிறார்கள். ஏராளமான விளைநிலங்களும் சேதமடைந்துள்ளன, விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் மதிப்பிட்டு வருகிறார்கள். கால்வாயின் சுற்றுச்சுவரில் எலி ஓட்டை போட்டுள்ளதால் இந்த உடைப்புக்கு மற்றொரு காரணம் எனத் தெரியவந்துள்ளது " எனத் தெரிவித்தார்.

நீர்வளத்துறை அமைச்சர் ராம் சந்திர சாஹிஸ் கூறுகையில், " இந்த கால்வாய் உடைந்தமைக்கான காரணத்தை அறிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு யார் செய்தி்ருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்"எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT