ஹைதராபாத்,
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள மக்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்களை ஏற்க மறுத்துவருவதால், வங்கிகளில் கோடிக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன.
ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை 14 வடிவங்களில் தயாரித்து, மக்களிடம் புழக்கத்தில் விட்டுள்ளது. ஒவ்வொரு நாணயமும் குறிப்பிட்ட அம்சங்களுடன் வடிமைக்கப்பட்டுள்ளதால், 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும், யாரும் செல்லாது என்று நாணயங்களை வாங்க மறுத்தால் தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறியும் இந்த இரு மாநிலங்கள் வாங்க மறுக்கிறார்கள்.
தெலங்கானா, ஆந்திரா மாநிலத்துக்குள் புதிதாகச் செல்லும் வேறுமாநில மக்கள், 10 ரூபாய் நாணயங்களை வைத்து மாற்றிப் பொருள்கள் வாங்கும்போது மிகக்கடினமாகவும், அதிர்ச்சியானதாகவும் அமையும்.
இதுகுறித்து ஆந்திரா வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஓடும் அரசுப்பேருந்துகளில் மட்டுமே 10 ரூபாய் நாணயங்கள் பெரும்பாலும் ஏற்கப்படுகின்றன. இந்த மாநிலங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் கூட 10 ரூபாய் நாணயங்களை ஏற்பதில்லை. 10ரூபாய் நாணயம் செல்லாததாகிவிடும் என்று சிலர் கிளப்பிவிடும் வதந்திகளை நம்பி மக்கள் இந்த நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். வியாபாரிகள் கூட போலியானதாக இருக்கும் எனக் கருதி 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
கச்சிபவுலி பகுதியில் வர்த்தநிறுவனம் வைத்திருக்கும் ஒருவர் கூறுகையில், " யாருமே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள், ஏன் எனத் தெரியவில்லை. இதனால் வேறுவழியின்றி நாணயங்களை நாங்கள் ஓரமாகவைத்துவிட்டோம்" எனத் தெரிவித்தார்.
வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் சில நூறுகளில் மட்டுமே தேங்கிக்கிடக்கின்றன. ஆனால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் ஆயிரக்கணக்கில் மூட்டைகளாகத் தேங்கிக் கிடக்கின்றன.
அதிலும் திருமலை திருப்பதி கோயிலில் மட்டும் ரூ.14 கோடி அளவுக்கு 10 ரூபாய் நாணயங்கள் தேங்கிக்கிடக்கின்றன. அவை மூடைகளில் கட்டி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கின்றன.
வங்கியில் தேங்கிக்கிடக்கும் காசுகளை வேறுமாநில வங்கிக்கு மாற்றுவது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், " இந்த 10 ரூபாய் நாணயங்களை வேறு மாநில வங்கிக்களுக்கு கொண்டு செல்வது அதிகமான செலவுபிடிக்கும். நாணயங்களை ஏற்ற லாரி வாடகை, உடன் செல்லும் பாதுகாவலர் செலவு போன்றவற்றை கணக்கிட்டால் செலவு அதிகரிக்கும். தேங்கிக்கிடக்கும் இந்த நாணயங்களில் ஒவ்வொரு வங்கியிலும் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதோடு, வங்கியின் தினசரி பணப்புழக்கத்தையும் பெருமளவு பாதிக்கிறது" என்று தெரிவித்தனர்.
என். ரவிக்குமார்